விண்வெளியில் இருப்பது யார்? பதில் அளிக்கும் இணையதளம்!
குவோரா ( quora) போன்ற கேள்வி பதில் இணையத்தளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, கேள்விக்கு பதிலாகும் இணையதளங்கள் இருப்பது தெரியுமா? அத்தகைய இணையதளம் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
விண்வெளியில் இருப்பது யார்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் http://www.whoisinspace.com/ எனும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தளத்தின் பெயரே கேள்வியாக அமைந்துள்ள நிலையில், அதற்கான பதிலை தளத்தின் உள்ளட்டக்கம் தருகிறது. அதாவது, இன்றைய தேதிக்கு விண்வெளியில் வாசம் செய்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எனும் தகவலை அளிக்கிறது.
விண்வெளி ஆய்வுக்காக அமைக்கப்பட்டு வரும் சர்வதே விண்வெளி ஆய்வு மையத்தில் பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து அவ்வப்போது விண்வெளி விரர்களே விண்வெளிக்கு சென்று வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காக ஹூ ஈஸ் இன் ஸ்பேஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளி மையத்தில் இப்போதைக்கு இத்தனை பேர் இருக்கின்றனர் என்று கொட்டை எழுத்துக்களில் தெரிவிப்பதோடு, அவர்கள் யார்? எத்தனை நாட்களாக அங்கு இருக்கின்றனர் எனும் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீரர்களின் புகைப்படத்தில் கிளிக் செய்தால் தொடர்புடைய விக்கிபீடியா பக்கத்தை பார்க்கலாம்.
இந்த தளம் போலவே, ’ஹவ்மெனி பியூப்பில் ஆர் இன் ஸ்பேஸ் ரைட் நவ் ’ (https://www.howmanypeopleareinspacerightnow.com/) எனும் ஒரு இணையதளம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹூ ஈஸ் இன் ஸ்பேஸ் வெறும் நகல் தளமாக அல்லாமல், தன்னளவில் சிறந்த தளமாக இருப்பதோடு, கூடுதல் தகவல்களை அளிப்பதாகவும் இருக்கிறது.
விண்வெளி ஆய்வில் , சர்வதேச ஆய்வு மையம் மட்டும் அல்லாமல் சீனா சார்பில் டியாங்காங் விண்வெளி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பற்றிய விவரத்தை அளிப்பதோடு, விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ரோபோக்கள் ( விண்கலங்கள் ) பற்றிய தகவல்களையும் அளிக்கிறது. செவ்வாய்க்கு சென்றுள்ள கியூராசிட்டி ரோவர், வாயோஜர் உள்ளிட்ட விண்கலங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம்.
இவைத்தவிர, விண்வெளி ஆய்வில் ஏன் ஈடுபட வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் இந்த தளம் சுருக்கமாக அளிக்கிறது. மேலும் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தொடர்பான சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களையும் தருகிறது.
ஸ்மார்ட்டர் எவ்ரி டே (Smarter Every Day ) எனும் அறிவியல் சார்ந்த யூடியூப் சேனலை நடத்தி வரும் டெஸ்டின் இந்த தளத்தை நடத்தி வருகிறார்.
இந்த தளத்திற்கு ஆதரவாக அவர் இதே பெயரில் டிவிட்டர் பக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த டிவிட்டர் பக்கத்தில் (@whoisinspace) விண்வெளியில் இருந்து விண்வெளி வீரர்கள் வெளியிட்டு வரும் குறும்பதிவுகளை ரிடீவிட் செய்து வருகிறார்.