நண்பர்களை மறக்காமல் இருக்க ஒரு தளம்!
நண்பர்களை அழைக்க ஊக்குவிக்கும் இன்றைய இணையதளமான கால்யுவர்பிரண்ட்ஸ் (https://callyourfriends.io/ ) பற்றி பார்ப்பதற்கு முன் உங்களிடம் சில கேள்விகள்:
நெருக்கமான நண்பர்களை நீங்கள் கடைசியாக எப்போது அழைத்து பேசினீர்கள்?
உங்கள் உறவினர்களை எப்போதெல்லாம் அழைத்து பேசியிருக்கிறீர்கள்?
பல காலமாக பேசியிராத நண்பர்(கள்) ஏன் நம்மை தொடர்பு கொள்வதில்லை என நினைத்திருக்கிறீர்களா?
இன்றைய அவசர உலகில், நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து பேச போதிய அவகாசம் கிடைப்பதில்லை என நினைக்கிறீர்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடையாக அமையும் வகையில், மேலே சொன்ன இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதை மறக்காமல் இருக்க உதவுவதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை செய்து முடித்தீர்களா? அந்த பணியை செய்துவிட்டீர்களா? என நினைவூட்டுவதற்கான இணையதளங்களும், செயலிகளும் இருப்பது போல, கால்யுவர்பிரண்ட்ஸ் தளம், உங்கள் நெருக்கமான நண்பரை அழைத்து பேசினீர்களா? என நினைவூட்டுகிறது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டியது தான். ( விரும்பினால், அவர்கள் பிறந்த நாளையும் தெரிவிக்கலாம்.)
அதன் பிறகு, குறிப்பிட்ட இடைவெளியில், இந்த நண்பருடன் பேச வேண்டும் என இந்த தளம், உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து ஒருவரை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது. பெரும்பாலும் நாம் மறந்துவிடும் நண்பர்களை, அதாவது தொடர்பு கொண்டு அதிக நாள் ஆகிவிட்ட நண்பர்களை முதலில் பரிந்துரைக்கிறது.
குறுஞ்செய்தி வடிவில் வரும் இந்த நினைவூட்டலை ஊக்கமாக கொண்டு அந்த நண்பரை அழைத்து பேசலாம். நண்பருடன் பேசி விட்ட தகவலை இந்த தளத்திலும் தெரிவிக்கலாம். அதை கணக்கில் வைத்துக்கொண்டு, உங்கள் நட்பு பட்டியலை பரமாரித்து, அடுத்து யாருடன் பேச வேண்டும் என நினைவூட்டல் அனுப்பி வைக்கப்படும்.
நண்பர்களுடன் பேச எல்லாம் நினைவூட்டல் தேவையா என நீங்கள் நினைக்கலாம். தவறாமல் பேசிக்கொண்டிருக்கும் நண்பர்களை விட்டுவிடுங்கள், அதிகம் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அவ்வப்போது அழைத்து ஒரு நலம் விசாரிப்பு மேற்கொள்வது நல்லது தானே.
இப்படி அழைத்து பேச சில நிமிடங்கள் தான் ஆகும். ஆனால், அதற்கு நேரம் கிடைக்காமல் தான் அல்லாடிக்கொண்டிருக்கிறோம். நேரம் கிடைத்தாலும், இப்படி அழைத்து பேசுவதை முக்கியமாக நினைக்காமல் இருந்து விடுகிறோம்.
ஆனால், நண்பர்களை மறக்காமல் அடிக்கடி தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொள்வது நல்லது. இத்தகைய நீண்ட கால உறவு ஆரோக்கிய நோக்கிலும் நல்ல பலன் தரக்கூடிய எனும் ஹார்வர்டு நீண்ட கால ஆய்வை சுட்டிக்காட்டி, உங்கள் நண்பர்களை அழைத்துப்பேசுங்கள் என்கிறது இந்த தளம். நீங்கள் தயாரா?
இந்த தளம் கட்டணச்சேவை என்பதை கவனிக்க வேண்டும். இதில் ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. நட்புக்கான நினைவூட்டலை அத்தனை முக்கியமாக நினைக்கிறது இந்த தளம். அதோடு, நீங்கள் நண்பர்களை மறக்காமல் இருப்பது ஒரு பக்கம் எனில், உங்கள் நண்பரும் இவ்வாறு நினைத்து உங்களை அழைத்துப்பேசினால் மகிழ்ந்து போவீர்கள் தானே!