நமக்கு பிடித்த பாடல்களை அறிய ஒரு இணையதளம்
ஸ்பாட்டிபை இசை கேட்பு சேவை சார்ந்து இன்னொரு அருமையான சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. பகிர்வு ஸ்பாட்டிபை என பொருள்படும் இந்த இணையதளம் (https://sharedspotify.com/ ) , நண்பர்கள் தங்களுக்கு கூட்டாக பிடித்த பாடல்களை கேட்டு ரசிக்க வழி செய்கிறது.
ஸ்பாட்டிபை போன்ற சேவைகள், இணையத்தில் நமக்கு பிடித்த பாடல்களை கேட்டு ரசிப்பதற்கானவை. ஸ்பாட்டிபையில், புதிய பிடித்தமான பாடல்களை கண்டறிய, நமக்கான பாடல் பட்டியலை ( பிளேலிஸ்ட்) உருவாக்கி கொள்ளவும் பல வழிகள் இருக்கின்றன.
இசைப்பிரியர்களின் ஸ்பாட்டிபை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மூன்றாம் தரப்பு தளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் வரும் ஷேர்டுஸ்பாட்டிபை சேவை, நமக்கும், நண்பர்களுக்கும் பிடித்த பாடல்களை கண்டறிய உதவுகிறது.
நீங்களும், நானும் இளையராஜா ரசிகர் என வைத்துக்கொள்வோம். எனக்கு பிடித்தமான ராஜா பாடல்கள் பட்டியல் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான ராஜா பாடல்கள் பட்டியலும் உங்களிடம் இருக்கலாம். இந்த இரண்டு பட்டியல்களிலும் பொதுவாக பாடல்களை கேட்டு ரசிக்க முடிவது நட்புமயமான இசை அனுபவமாக அமையும் அல்லவா?
இதை தான் இந்த தளம் செய்கிறது. இந்த சேவை மூலம் உங்கள் ஸ்பாட்டிபை கணக்கை கொண்டு, உங்களுக்கான இசை அறையை உருவாக்கி அதை நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உடனே, இந்த தளத்தின் அல்கோரிதம் இருவரும் கேட்கும் பாடல்களில் பொதுவான பாடல்களை தேர்வு செய்து பிளேலிஸ்ட்டாக அளிக்கும். பிறகென்ன இருவரும் சேர்ந்து அந்த பாடல்களை கேட்டு மகிழலாம்.