திகில் மரம் இணையதளம்
தமிழ் புனைகதை உலகம் மிகவும் வறுமையாக தான் இருக்கிறது. இப்படி சொல்வது தற்போதைய தமிழ் புனைகதைகளின் எண்ணிக்கை குறித்தோ அல்லது தரம் குறித்தோ அல்ல. இணையத்தில் தமிழ் புனைகதைகளுக்கான இடம் குறித்து. அதாவது தமிழ் புனைகதைகளுக்கு என்று நல்லதொரு இணையதளம் இல்லை. இந்த கருத்தை ஏற்பவர்களும் சரி, ஏற்க விரும்பாமல் வாதிட விரும்புகிறவர்களும் சரி, திகல் மரம் எனும் ’ஹாரர்ட்ரி’ (https://horrortree.com/ ) இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
ஹாரர்ட்ரி, திகல் கதைகளுக்கான இணையதளம். இப்படி சொல்வது இந்த தளம் பற்றிய மேலோட்டமான அறிமுகமாகவே அமையும். ஏனெனில் உண்மையில் இந்த தளம் திகில் கதைகளுக்கான இணைய வீடாக இருக்கிறது. திகில் கதைகளுக்கான இணைய சமூகமாகவும் விளங்குகிறது என சொல்லலாம்.
நீங்கள் திகில் கதை பிரியராக இருந்தாலோ இந்த தளத்தை பார்த்த மாத்திரத்தில் இதன் அருமையை உணரலாம். அதே நேரத்தில் திகில் கதை எழுத்தாளர்களும் இந்த தளத்தை பெரிதும் விரும்பும் வகையிலேயே அமைந்துள்ளது. அடிப்படையில் இந்த தளம் திகில் கதை எழுத்தாளர்களுக்கானது. இளம் எழுத்தாளர்கள், எழுத விரும்பும் வளரும் எழுத்தாளர்கள், ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என எல்லா வகையான எழுத்தாளர்களுக்கான இருப்பிடம் இந்த தளம்.
அதாவது திகில் கதை எழுத்தாளர்கள் தங்களுக்கான வெளியீட்டு வாய்ப்புகளை இந்த தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். திகில் கதைகளுக்கான வெளியீட்டு வாய்ப்பை முக்கியமாக திகில் கதை தொகுப்புகளுக்கான வெளியீட்டு வாய்ப்பை இந்த தளம் வழங்குகிறது. இது தான் இந்த தளத்தின் முதன்மை நோக்கமும்!
ஆக, புதிதாக திகல் கதை எழுதுபவர்கள் அல்லது, புதிய திகில் கதை எழுத உத்தேசித்துள்ள எழுத்தாளர்கள், அவற்றை சமர்பிக்க கூடிய திகில் கதை தொகுப்புகளையும், வெளியீட்டாளர்களையும் இந்த தளத்தின் வாயிலாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
புதிதாக வெளியாக இருக்கும் திகில் கதைகள், திகில் கதை தொகுப்புகள் தொடர்பான தகவல்களை அளிப்பதோடு, எந்த வகையில் கதைகள் ஏற்கப்படுகின்றன எனும் விவரத்தையும் இந்த தளம் அளிக்கிறது. அதாவது, கதைகளுக்கான சன்மானம் எந்த வகையில் அளிக்கப்படுகிறது என்பதை தனியே குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட தொகை, ராய்லடி கட்டணம், நூலின் இலவச பிரதி ஆகிய பிரிவுகளின் கீழ் எழுத்தாளர்களுக்கான வருவாய் வாய்ப்பு பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள், எந்த படைப்பும் இலவசமானது அல்ல என்பது தான். குறைந்தபட்சம் வெளியீட்டுடன் இலவச பிரதியையேனும் எழுத்தாளர்கள் பெறலாம்.
தொகுப்பு நூல்கள், தொகுப்பு நூல் அல்லாதவை என இரண்டு பிரிவுகளின் கீழ் வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வரிசையாக வெளியாகும் புதிய திகில் கதை தொகுப்பு நூல் வரிசைகளை பார்த்தால் பொறாமையாகவும் இருக்கிறது. புதிய வெளியீடு தொடர்பான தகவல்களை செய்தி பட்டியல் போல வெளியாகி கொண்டிருக்கிறது. தொகுப்பு நூல்கள் தவிர பத்திரிகை வாய்ப்புகளுக்கான பகுதியும் இருக்கிறது.
இவைத்தவிர திகிலூட்டும் கதைகளை வாசிப்பதற்கான பகுதியும் இருக்கிறது. திகில் கதைகளை வாங்கும் வசதியும் இருக்கிறது.
திகில் கதை எழுத்தாளர்களுக்கான வழிகாட்டி வளமாக 2011 ல் துவங்கப்பட்ட இந்த தளம், அதன் பிறகு கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகிய பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது. ஆக, திகில் கதை எழுத விரும்புகிறவர்கள் வழிகாட்டி கட்டுரைகளை படிக்கலாம் என்பதோடு, நேர்காணல்கள் வாயிலாக திகில் கதை எழுத்தாளர்களை இன்னும் நெருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்தை மேலோட்டமாக பார்வையிட்டாலே இப்படி ஒரு இணையதளம் தமிழ் திகில் புனைகதைகளுக்கு இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்.
தமிழ் எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளக்கூடிய இன்னொரு இணையதளமான ரைட்டர்ஸ் டைஜஸ்ட் தளம் பட்டியலிட்டுள்ள, எழுத்தாளர்களுக்கான சிறந்த குறும் தளங்கள் பட்டியலில் இருந்து இந்த தளத்தை கண்டறிந்தேன் என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.