பாட்காஸ்டிங் கேட்க உதவும் இணையதளம்
இன்று ஒரு தகவலுடன் துவங்கலாம். சுடோகு எனும் சொல்லை நீங்கள் அறிந்திருக்கலாம். குறுக்கெழுத்து போன்றதொரு புதிர் விளையாட்டை இந்த சொல் குறிக்கிறது. இதே போலவே, சுண்டோகு (tsundoku ) எனும் சொல் இருப்பது தெரியுமா?
சுடோகு போல் இதுவும் ஜப்பானிய சொல் தான். புத்தகங்களை வாங்காதவர்களும், படிக்காதவர்கள் என நிறைய பேர் இருந்தாலும், புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கி வைத்துவிட்டு, அதை படிக்காமல் இருக்கும் வழக்கம் கொண்டவர்களும் இருக்கத்தானே செய்கிறீர்கள். இவர்களை குறிப்பது தான் சுண்டோகு எனும் ஜப்பானிய சொல்.
பிபிசி தளத்தில் இது பற்றி சுவாரஸ்யமான கட்டுரை வந்திருக்கிறது. அதை வாசிக்கவும்.
நிற்க, புத்தகங்களை வாங்கி வைத்து படிக்காமல் இருப்பது போல, இணைய உலகில், பாட்காஸ்டிங் எனப்படும் இசை நிகழ்ச்சிகளை கேட்கும் சேவைகளுக்கு சந்தா செலுத்திவிட்டு, பின்னர் அவற்றை கேட்கமாலே இருக்கும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.
பலரும், எந்த பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளுக்கு சந்தா செலுத்தியிருக்கிறோம் என்பதை கூட மறந்து திண்டாடலாம். வெப்சிரீஸ்களை யாரும் இப்படி மறப்பதில்லை என்பது வேறு விஷயம். இத்தகைய பாட்காஸ்டிங் மறதியாளர்களுக்காக, ஒண்டேஷோ (https://oneaday.show/login ) எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
பாட்காஸ்டிங் பிரியர்கள் , தினமும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பகுதியேனும் கேட்க வழி செய்யும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டிரீமிங் சேவையான ஸ்பாட்டிபை, பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளையும் கேட்க வழி செய்கிறது. ஆகவே, இந்த தளத்தில் ஸ்பாட்டிபை கணக்கு மூலம் நுழைந்தால், உங்கள் அபிமான பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளில் தினம் ஒரு பகுதியை கேட்கவும், அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் வழி செய்கிறது.
பாட்காஸ்டிங் பிரியர்கள் முயன்று பார்க்கலாம்.
பாட்காஸ்டிங் தொடர்பாக, அமீத் வர்மாவின் செய்தி பாட்காஸ்டிங் பற்றி நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதன் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம்.
அதென்ன பாட்காஸ்டிங் எனும் கேள்வி உங்களுக்கு இருந்தால் அல்லது அந்த கேள்வி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பரிந்துரைக்கலாம்.