நீங்கள் இதை டிவீட் செய்ய முடியாது!
இணையத்தில் பயனில்லா இணையதளங்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறது. குறிப்பிட்ட எந்த வித பலன் அளிக்கும் நோக்கம் இல்லாமல், ’சும்மா’ அமைக்கப்படும் இணையதளங்களாக இவை அமைகின்றன. இந்த வகை இணையதளங்களை அடையாளம் காட்டுவதற்காக என்றே, யூஸ்லெஸ்வெப் என்று ஒரு இணையதளம் இருக்கிறது.
இப்படி சும்மாவேனும் இணையதளங்களை எதற்காக அமைக்க வேண்டும் என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஆனால், பயனில்லாத இணையதளங்கள் என வகைப்படுத்தப்படும் தளங்களை, உண்மையில் பயனில்லாத தளங்கள் என புறந்தள்ளிவிட முடியாது. இவை வெறுமையாக இருந்தாலும் கூட, சரக்கில்லாமல் இருப்பதில்லை என்பதே விஷயம்.
இவை அமைக்கப்பட்டிருக்கும் முறையில் வெளிப்படும் சுவாரஸ்யமும், புதுமையாக்கமும் நிச்சயம் கவர்ந்திழுக்கவே செய்யும். இவற்றில் சில கேலியும், கிண்டலுமாக ஒரு விஷயத்தை விமர்சிக்கும் வகையிலும் அமைவதுண்டு.
இதற்கு அழகான உதாரணம், ’கேன் நாட் டுவீட் திஸ்’ (https://cant-not-tweet-this.com/) எனும் இணையதளம். உங்களால் டிவீட் செய்ய முடியாது எனும் பொருள் கொண்ட இந்த தளத்தில் எந்த உள்ளடக்கமும் கிடையாது. மாறாக, டிவீட் எனும் வார்த்தை மட்டுமே இருக்கிறது. தளத்தில் எங்கு மவுசை நகர்த்தினாலும் அந்த வார்த்தையே விடாமல் துரத்தி வருகிறது.
கொஞ்சம் கவனமாக பார்த்தால், முகப்பு பக்கத்தின் பின்னணியில், இதை டிவீட் செய்ய முடியாது எனும் வார்த்தைகள் அடுத்தடுத்து தோன்றிக்கொண்டிருப்பதை உணரலாம். அவ்வளவு தான் இந்த தளம்.
ஆனால், தளத்தில் உள்ள டிவீட் எனும் வார்த்தையை கிளிக் செய்தால், டிவிட்டர் பக்கத்திற்கு அழைத்துச்செல்கிறது. ’ எரிச்சலூட்டும் உங்கள் சமூக ஊடக பழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்…” எனும் வாசகத்தை இந்த பக்கம் மூலம் உங்கள் டிவிட்டர் கணக்கில் இருந்து டிவீட் செய்யலாம்.
யோசித்துப்பார்த்தால், இதை டிவீட் செய்யவும் என இணையவெளி எங்கும் விடுக்கப்படும் வேண்டுகோள் மீதான கேலியான விமர்சனமாக இந்த தளம் அமைவதாக கருதலாம். சும்மா எல்லாவற்றையும் ஏன் டிவீடு செய்து கொண்டும், ரிடிவீட் செய்து கொண்டும் இருக்க வேண்டும்? அதனால் தான் இந்த தளம், இதை உங்களால் டிவீட் செய்ய முடியாது என்கிறது. உங்கள் கருத்து என்ன?