எல்லோரும் நாயகனே என சொல்லும் இணையதளம்
ஓவர்மைண்ட்லேப்ஸ் ( https://www.overmindlabs.com/million) இணையதளத்தை எனக்கு பிடித்திருக்கிறது. இந்த தளம் நடத்தும் சமூக பரிசோதனைகள் பற்றி தெரிந்து கொண்டால் உங்களுக்கும் பிடிக்கும். ஏனெனில், சமூக பரிசோதனைகளை நடத்துவதற்காக என்றே துவக்கப்பட்டுள்ள தளமாக இது அமைந்துள்ளது.
இப்போது, இந்த தளம் நடத்திக்கொண்டிருக்கும் சமூக பரிசோதனை , நீங்கள் மில்லியனில் ஒருவரா என கேட்கும் வகையில் அமைந்துள்ளது. ஆம், எனில் இந்த தளத்தில் உங்கள் கனவை நீங்கள் பதிவு செய்யலாம்.
கோடீஸ்வரர்கள் பட்டியல், சாதனையாளர்கள் பட்டியல் போலவே, 30 வயதுக்குள் சாத்தித்த 30 பேர், 40 வயதில் செல்வாக்கு பெற்ற 40 பேர் போன்ற பட்டியல்களை வெளியிடும் வழக்கமும் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
அதென்ன 40 சாதனையாளர்கள், ஏன் ஆயிரம் சாதனையாளர்கள் இருக்க கூடாதா? இல்லை லட்சம் சாதனையாளர்கள் தான் இருக்க கூடாதா? என கேட்பது போல, இந்த தளம் ஒரு மில்லியனுக்கும் குறைவான ஒரு மில்லியன் சாதனையாளர்கள் எனும் பட்டியலை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
வழக்கமான பட்டியல்களுக்கு மாறாக சாமானியர்கள் பங்கேற்க கூடிய பெரியதொரு பட்டியலை உருவாக்க விரும்பி அதற்காக அழைப்பு விடுத்திருக்கிறது. லட்சாதிபதி அல்லாதவர்களின் நம்பிக்கையையும், கனவையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதே நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்பவர்கள், இந்த தளத்தில் தங்களை தாங்களே பரிந்துரை செய்யலாம். தங்கள் கனவை, அதாவது அவர்கள் சாதிக்க விரும்புவதை தெரிவிப்பதன் மூலம் இவ்வாறு பதிவு செய்யலாம்.
இந்த இடத்தில் தான் இந்த யோசனை சமூக பரிசோதனையாக மாறுகிறது. இவ்வாறு சாமானியர்கள் சமர்பிக்கும் கனவுகள், ஒரு மில்லியனை தொடும் போது , செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த யோசனைகளை ஆய்வு செய்து மனிதகுலம் என்ன நினைக்கிறது என கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பலர், தங்கள் கனவுகளை இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். நீங்களும் கூட அவ்வாறு செய்யலாம், அல்லது மற்றவர்கள் கனவுகளை படித்துப்பார்க்கலாம். பல கனவுகள் சுவாரஸ்யம் தருகின்றன.
மார்டின் எனும் மென்பொருளாலர் இத்தகைய சமூக பரிசோதனைகளை நடத்துவதற்காக என்றே , சிலிக்கான் வேலி வேலையை விட்டுவிட்டு, ஓபன் மைண்ட்லேப் நிறுவனத்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிறுவனத்தோடு, நிறுவனங்களுக்குள் பயன்படுத்தக்கூடிய விக்கி சேவையை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த இணையதளத்தின் பின்னே உள்ள நிறுவன பெயரிலும் ( Evil Master Plan, ) ஒரு வித பகடி தன்மை இருந்தாலும், இந்த தளத்தின் சமூக பரிசோதனை எப்படி முன்னேறுகிறது என பார்க்கலாம்.