இந்திய இசைக்கான ஸ்டீரிமிங் சேவை
இசைப்பிரியர்கள், அதிலும் குறிப்பாக இந்திய இசைப்பிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செயலியாக ராக்யா (https://www.ragya.com/ ) அறிமுகம் ஆகியிருக்கிறது. ஸ்டீரிமிங் வகை செயலியான ராக்யாவை, இந்திய இசைக்கான ஸ்பாட்டிபை என வர்ணிக்கலாம் என்றாலும், இந்த சேவை தனித்துவமானது.
ஸ்பாட்டியை போன்ற இசை ஸ்டீரிமிங் சேவைகளில் விரும்பிய பாடல்களை கேட்டு ரசிக்கலாம். ஸ்பாட்டிபையிலும் இந்திய இசையை கேட்கலாம் என்றாலும் , காணா போன்ற இந்திய இசைக்கான பிரத்யேக செயலிகளும் இருக்கின்றன.
இந்த வரிசையில், இந்திய பாரம்பரிய இசைகான ஸ்டிரீமிங் செயலியாக ராக்யா உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய இசையின் தனித்தன்மை அதன் ராகங்கள் என்பதும், நாளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற ராகங்கள் இருப்பது இந்திய ராகங்களின் அபூர்வ குணங்களில் ஒன்று என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்திய ராகங்களின் இந்த தனித்தன்மையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ராஜ்யா செயலி, பயனாளிகள் எந்த நேரத்தில் பாட்டு கேட்கின்றனறோ அந்த நேரத்திற்கு ஏற்ற ராகம் கொண்ட பாடலை ஒலிக்கச்செய்கிறது.
ஆக, அதிகாலை நேரத்தில் ராக்யா செயலியை திறந்தால், அதிகாலை ராகம் கொண்ட இசையை கேட்கலாம். இதே போல மாலை அல்லது இரவு நேரத்தில் செயலியை திறந்தால் அந்த நேரத்து ராகம் சார்ந்த இசையை கேட்கலாம்.
இசைக்கு மருத்துவ குணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இசை கேட்கும் போது பலரும் தங்களை மறந்து இசையில் ஒன்றிவிடுவதும் உண்டு. சூழ்நிலைக்கு பொருத்தமான இசையை கேட்கும் போது, இந்த ஒன்றிவிடுதலும் தன்னை மறத்தலும் இன்னமும் அதிகரிக்கலாம்.
இத்தகைய பரவசத்தை இசைப்பிரியர்களுக்கு அளிக்கும் வகையில், ராக்யா செயலிகளை, ஒருவர் இசை கேட்க வரும் நேரத்திற்கு பொருத்தமான ராகம் சார்ந்த இசையை கேட்க வழி செய்கிறது. இந்திய இசை என்றாலும், இப்போதைக்கு இந்துஸ்தானி இசைக்கலைஞர்களின் தேர்வுகளே முன்னிறுத்தப்படுகிறது.
இதே முறையில் கர்நாடக சங்கீத பாடல்களும், நாட்டுப்பாடல்களும் கூட பரிந்துரைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஏன் ராகங்கள் சார்ந்த திரையிசைப்பாடல்களையும் பரிந்துரைக்கலாம்.
பொருத்தமான இசையை பரிந்துரைப்பதோடு, இசைக்கலைஞர்கள் தொடர்பான மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள ராக்யா வழி செய்கிறது.
மும்பையைச்சேர்ந்த ஆதித்யா திபங்கர் இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி தொடர்பான இந்து நாளிதழ் அறிமுகம் இங்கே: