ஜூம் பின்னணியும், தேர்தல் விழிப்புணர்வும்.
பீகார் தேர்தலில் ஜூம் சேவை பெரிதாக பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் உச்சகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், வாக்காளிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூம் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ’ஜூம் அவுட் தி வோட்’ ( https://www.zoomoutthevote.com/) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில், வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்வதை நோக்கமாக கொண்டு இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் தான். இந்தியா என்றில்லை, பெரும்பாலான நாடுகளில் இது தான் நிலை.
வாக்காளர்களில் பலர் வாக்களிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும், அலட்சியம், அவநம்பிக்கை அல்லது இன்னும் பிற ஏற்க முடியாத காரணங்களினால், வாக்களிக்காமல் இருப்பவர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரமும் பல நாடுகளில் தேர்தல் நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் நம்பிக்கை அடிப்படையில் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அண்மை காலத்தில், கூகுள், பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்கள் கூட, தங்கள் சேவைகளில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன.
இந்த பின்னணியில், ஜூம் பின்னணி வசதியை வாக்களிக்க தூண்டுவதற்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மேலே சொன்ன இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பிரபலமான வீடியோ சந்திப்பு சேவையான ஜூமில், பின்னணி தோற்றத்தை தேர்ந்தெடுக்கும் வசதி பிரபலமானது. உண்மையில், வீடியோ சந்திப்பு சேவையில் ஜூமின் வெற்றிக்கு இந்த பின்னணி வசதி முக்கிய காரணம்.
வீடியோ சந்திப்பின் போது, திரையில் தோன்றும் பின்னணி காட்சியை விருப்பம் போல தேர்வு செய்து கொள்ள ஜூம் பின்னணி வசதி உதவுகிறது. ஜூம் பின்னணி வசதியை விருப்பம் போல அமைத்துக்கொள்ள உதவும் மூன்றாம் தரப்பு செயலிகளும் இருக்கின்றன.
ஜூமின் பின்னணி தோற்றத்தை தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிக்கும் தோற்றமாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதை தான், ஜூம் அவுட் தி வோட் இணையதளம் செய்கிறது. அதாவது, இந்த தளம் மூலம், வாக்களிப்பது தொடர்பான பின்னணி காட்சியை உருவாக்கி கொண்டு, அதை பயனாளிகள் தங்கள் ஜூம் சந்திப்புகளின் போது, பின்னணி தோற்றமாக வைத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம், ஜூம் சந்திப்பில் பங்கேற்பவர்களும், வாக்களிக்க வேண்டும் எனும் செய்தியை பெறுவார்கள் அல்லவா! அது மட்டும் அல்ல, அவர்களும் விரும்பினால், இந்த தளத்தில் இருந்து வாக்களிக்கும் கோரிக்கை பின்னணியை உருவாக்கி தங்கள் ஜூம் சந்திப்புகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் பங்கேற்பவர்கள் தங்கள் பங்கிற்கு தேர்தல் பின்னணி தோற்றத்தை உருவாக்கி பயன்படுத்தலாம்.
இப்படி, ஜூம் சந்திப்புகள் வழியே, வாக்களிப்பதற்கான கோரிக்கை நட்பு வட்டங்களில் பரவி பெருகும் வாய்ப்புள்ளது. இந்த பகிர்தலை எளிதாக்க, பின்னணி தோற்றத்தில் கியூஆர் கோடி வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தால், இந்த இணையதளத்திற்கு சென்று விடலாம்.
மேலும், இந்த பின்னணி தோற்றத்தை பகிர்பவர்கள் தங்கள் கோரிக்கை நண்பர்கள் வட்டத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை வரைபடமாக பார்க்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பொய்ச்செய்தியும் இன்னும் பிற உத்திகளும் விளையாடும் இந்த தேர்தலில், பெரும்பாலானோர் வாக்களிப்பது முக்கியம் என கருதப்படுகிறது. இதை சாத்தியமாக்க்கும் பல முயற்சிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் அமெரிக்க கல்லூரி மாணவர்கள் சிலரின் கூட்டு முயற்சி என்பது கவனிக்க வேண்டிய அம்சம்.
தினமும் ஜூம் சந்திப்புகளில் மூழ்கியிருக்கும் நிலையில், நாட்டு நலனுக்காக இந்த வீடியோ கூட்டங்களை பயன்படுத்திக்கொள்ள தேர்தலில் வாக்களிக்க வாருங்கள் என ஜூம் பின்னணி மூலம் அழைப்பு விடுக்க வழி செய்வதாக தளத்தின் அறிமுகம் குறிப்பு தெரிவிக்கிறது.
நல்லது, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் கூட நம்மவர்கள் இந்த உத்தியை முயற்சிக்கலாம்.