லாக்டவுன் விளைவாக, தொலைக்காட்சிகளில் புதிய தொடர்களுக்கு வழியில்லாமல், மெட்டி ஒலி உள்ளிட்ட பழைய தொடர்கள் மறுஒளிபரப்பாகி வருகின்றன. தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பாகிறது.
மக்கள் இந்த தொடர்களை விரும்பி பார்க்கின்றனரா, வேறு வழியில்லாமல் பார்க்கின்றனரா என்றுத்தெரியவில்லை. ஆனால், உண்மையிலேயே ஒரு தொடரை மறு ஒலிபரப்பு செய்வது என்றால் என்ன? முன்னர் ஒரு ஊடகத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றத் தொடரை, பின்னர் வேறு ஒரு ஊடகத்தில் அதன் தன்மைக்கேற்ப ஒளிபரப்புவது என கொள்ளலாமா?
ஆம் எனில், தி ஆபிஸ் தொடர் தற்போது இப்படி தான் மறு அவதாரம் எடுத்திருக்கிறது.
தி ஆபிஸ் (The Office), அமெரிக்காவில் நவீன அலுவலக சூழலை நையாண்டி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்று அறிய முடிகிறது. அலுவலக கலாட்டாக்கள், அரட்டைகள், கேலிகள், உணர்வுகளை இந்த தொடர் பிரதிபலித்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது.
தற்போது, தி ஆபிஸ் தொடர் பற்றி படித்து தெரிந்து கொள்வதோடு தொடரை பார்க்க விரும்பினால், நெட்பிளிக்சில் ஒவ்வொரு சீசனாக பார்த்துவிடலாம்.
நிற்க, ஆபிஸ் தொடருக்கான நெட்பிளிக்ஸ் பரிந்துரை செய்வது அல்ல நம் நோக்கம். இன்றளவும், வெவ்வேறு ஊடகங்களில் பார்த்து ரசிக்க கூடிய ஆர்வம் கொண்ட தி ஆபிஸ் போன்ற தொடர்களை, உள்ளபடியே வேறு ஒரு ஊடகத்தில் மறு ஆக்கம் செய்தால் எப்படி இருக்கும்?
இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது. தி ஆபிஸ் ஸ்லேக். காம் (https://theofficeslack.com/) இணையதளம். ஆபிஸ் தொடரை, ஸ்லேக் மெசேஜிங் சேவையில் அப்படியே மறு உருவாக்கும் செய்து கொண்டிருக்கிறது இந்த தளம்.
இந்த இடத்தில் ஸ்லேக் பற்றி ஒரு அறிமுகம். ஸ்லேக், வாட்ஸ் அப் போன்ற மெசேஜிங் சேவை வகையை சேர்ந்தது. ஆனால், இந்த சேவை முற்றிலும் தொழில்முறையினருக்கானது. எப்படி வாட்ஸ் அப் சேவை வெகுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல ஸ்லேக் பணியிடங்களில் தொழில்முறை தகவல் பரிமாற்றத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அலுவலக சூழலில் இமெயிலின் பயன்பாடு இனி தேவையிருக்காது என சொல்லக்கூடிய அளவுக்கு ஸ்லேக் பயன்பாடு முன்னிறுத்தப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
வாட்ஸ் அப்பில், அரட்டை, குழு வசதி போன்றவை எல்லாம் இருப்பது போல, ஸ்லேக்கில் சேனல்கள் மிக பிரபலம். அலுவலக சூழலில் குறிப்பிட்ட பிரிவுக்கான சேனலை அமைத்துக்கொண்டு, குழு உரையாடல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
ஸ்லேக்கின் அருமையை அலுவலக சூழலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். இல்லை எனில் ஸ்லேக் அறிமுக யூடியூப் வீடியோக்களை பாருங்கள்:
அலுவலகம் சார்ந்த தொடரான தி ஆபிசுக்கும், அலுவலகம் சார்ந்த மெசேஜிங் சேவையான ஸ்லேக்கிற்கும் இப்போது எளிதாக முடிச்சு போடலாம் அல்லவா? அதை தான் செய்திருக்கின்றனர். ஆம், தி ஆபிஸ் தொடரின் ஒவ்வொரு பகுதியையும், ஸ்லேக் சேவையில் மேசேஜிங் வடிவில் ஒளிபரப்பத்துவங்கியிருக்கின்றனர்.
ஆபிஸ் தொடர் நிஜமாகவே நவீன அலுவலகத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி கற்பனை செய்து கொண்டு, அதன் உரையாடல்களை ஸ்லேல் மேசேஜிங் வடிவிலை நிகழ்த்தி வருகின்றனர். அதாவது, ஆபிஸ் தொடர் ஸ்லேக்கில் நேரடியாக நிகழ்வதை பார்க்கலாம்.
இதற்காக அமைக்கப்படுள்ள தி ஆபிஸ் ஸ்லேக் இணையதளத்தில், வாரந்தோறும் ஆபிஸ் தொடர் பகுதியை, ஸ்லேக் உரையாடல்களாக பின் தொடரலாம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்லேக் சேனல்கள் உங்களுக்கு வழிகாட்டும்.
தி ஆபிஸ் தொடரை மட்டும் அல்ல, ஸ்லேக் சேவையையும் அறிமுகம் செய்து கொள்ள நல்ல வழி.
புதுமையான முயற்சி தான் இல்லையா? இதன்படி பார்த்தால் நம்மூரில் மெட்டி ஒலி தொடரை வாட்ஸ் அப்பில் மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.
-