ஏஐ முகங்களை காண வாருங்கள்!
புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ள வழி செய்யும் இணையதளங்களில், சிஜிபேசஸ் (https://cgfaces.com/en/ ) கொஞ்சம் மாறுபட்டது. ஏனெனில், இந்த தளம், இல்லாத மனிதர்களின் டிஜிட்டல் படங்களை பட்டியலிடுகிறது.
அதெப்படி இல்லாத மனிதர்களின் படங்கள் எப்படி இருக்கும் என இந்த ஏ.ஐ யுகத்தில் கேட்பதற்கில்லை.
எழுத்துக்களில் துவங்கி, கலை படைப்புகள் வரை, பலவற்றை மனிதர்கள் போலவே, ஏ.ஐ உருவாக்கத்தருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏ.ஐ ஆக்கங்களை எளிதாக அணுக வழி செய்யும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் தான் சிஜிபேசஸ் வருகிறது.
இந்த தளத்தில், ஏ.ஐ உருவாக்கிய மனித டிஜிட்டல் உருவங்களை காணலாம். எல்லாமே நிஜத்தில் இல்லாத மனிதர்களின் டிஜிட்டல் தோற்றங்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஜோடிகள் என பல வகையாக இந்த படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நிஜ மனிதர்களை பயன்படுத்த முடியாமல், டிஜிட்டல் தோற்றங்களை பயன்படுத்த வேண்டிய இடங்களில் கைகொடுக்க கூடிய படங்கள் இவை என குறிப்பிடப்பட்டுள்ளன.
அச்சு அசல் (!) நிஜ மனிதர்கள் போலவே தோன்றும் இந்த டிஜிட்டல் ஆக்க மனிதர்களை பார்த்தால் வியப்பாக தான் இருக்கிறது. ஒவ்வொரு உருவத்தையும் உற்று பார்த்தால், நிறைய யோசிக்க வைக்கிறது.