கேளுங்கள் கொடுக்கப்படும் என அழைக்கும் இணையதளம்
’கேட்பவரெல்லாம் பாடலாம்’! என்று பாடிக்கொண்டே ”டொனேட் ஏ பீட்” இணையதளத்தை அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த தளம், பயனாளிகளை பாடல் கேட்க செய்து, அதன் மூலமே நன்கொடையும் அளிக்க வைக்கிறது.
பயனாளிகள் கேட்டால் மட்டும் போது, கொடுக்க வேண்டாம். அவர்கள் சார்பில் இந்த தளம் சிறிய தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கும்.
நல்ல யோசனையாக இருக்கிறதே என சொல்லத்தோன்றுகிறதா? உண்மை தான்.
இந்த தளம் எப்படி செயல்படுகிறது என பார்க்கலாம்.
டொனேட் ஏ பீட் (https://donateabeat.org/ ) தளம் ஒரு இசை கேட்பு சேவையாக உருவாக்கப்படவில்லை என்றாலும், இந்த தளம் சார்பில் இசைக்கலைஞர்கள் பல்வேறு புதிய பாடல்களை உருவாக்கியுள்ளனர். பயனாளிகள் இந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம். ஸ்பாட்டிபை உள்ளிட்ட முன்னணி இசை கேட்பு சேவைகள் மூலம் பாடல்களை கேட்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பாட்டிபை சேவையில் பயனாளிகள் பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதற்கான சிறு உரிமத்தொகை இந்த தளத்திற்கு வந்து சேரும் அல்லவா? இந்த தொகையில் தனது செயல்பாட்டு செலவுக்கான பகுதியை எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை சேவை அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குகிறது.
ஆக இந்த தளத்தில் உள்ள பாடல்களை கேட்பதன் மூலம், சேவை அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
இந்த தளத்தில் உள்ள பாடல்களை உருவாக்கியது யார் எனும் விவரம் தெரியவில்லை. இந்த தளத்தில் உள்ள பாடல்கள் எப்படி இருக்கின்றன என்றும் தெரியவில்லை. ஆனால், பயனாளிகளை இசை கேட்கச்செய்து அதன் மூலம் நன்கொடை வழங்கவும் வழி செய்வது நன்றாக இருப்பதால் இந்த அறிமுகம்.
*
பயனாளிகளின் இணைய பழக்கத்தை அடிப்படையாக கொண்டு நன்கொடை அளிக்கும் வகையில் செயல்படுவது இணையத்தில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம் தான். இகோஷியா எனும் தேடியந்திரம் ஒவ்வொரு முறை இணைய தேடல் வசதியை இந்த நோக்கில் பயன்படுத்திக்கொள்ளும் முன்னோடியாக இருக்கிறது.
அதே போல நெட்பிளிக்ஸில் படம் பார்க்கும் பழக்கத்தை கொண்டு நன்கொடை அளிக்கச்செய்யும் தளமும் இருக்கிறது. இந்த தளம் தொடர்பான அறிமுகத்தை வழங்கியுள்ள அவேர் இணைய இதழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரைகளை வழங்கி வருகிறது.