உங்கள் ஸ்க்ரீன்ஷாட்களுக்கான இணைய நூலகம்
இப்போதெல்லாம் யாரும் புக்மார்க் செய்வதில்லை. எல்லோரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்கின்றனர். எல்லாம் ஸ்மார்ட்போன் செய்யும் மாயம் தான்.
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் முக்கிய தளங்களையும், பின்னர் படிக்கலாம் அல்லது பார்த்துக்கொள்ளலாம் என நினக்கும் விஷயங்களை எல்லாம் ஸ்கிரீன்ஷாட்டாக சேமித்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்படும் போது ஸ்கிரீன்ஷாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எளிதேத்தவிர அவற்றை பராமரிப்பது எளிதல்ல. காலப்போக்கில் ஸ்கிரீன்ஷாட்கள் குவிந்து விடும் நிலையில் எந்த ஸ்கிரீன்ஷாட்டை எதற்காக எடுத்தோம் என்று கூட தெரியமாமல் குழப்பம் உண்டாகலாம்.
இத்தகைய அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்றால், ஜாடு (https://jaadoo.ai/ ) செயலியை நீங்கள் மிகவும் விரும்பலாம். ஏனெனில் இந்த செயலி நீங்கள் சேமித்து வைக்கும் ஸ்கிரீன்ஷாட்களை சிறப்பாக நிர்வகிக்கவும், தேவைப்படும் போது எளிதாக தேடி எடுக்கவும் வழி செய்கிறது.
ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் நிகழும் மாயம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த செயலி, அடிப்படையில் என்ன செய்கிறது என்றால், நீங்கள் எடுக்கும் ஸ்கிரீன்ஷாட்களை ஒரே இடத்தில் வைத்திருக்கிறது. அது மட்டும் அல்ல, ஸ்கிரீன்ஷாட்களை அவற்றுடன் தொடர்புடைய குறிச்சொற்களோடு இணைத்து வைக்கலாம். இதன் மூலம், எந்த ஸ்கிரீன்ஷாட் தேவையோ அந்த ஸ்கிரீன்ஷாட்டை எளிதாக தேடலாம்.
மேலும் செயற்கை நுண்ணறிவு ஆற்றலால், ஸ்கிரீன்ஷாட்களை தேடவும் உதவுகிறது. இதை தான் மாயம் என்கிறது ஜாடு. அதே நேரத்தில் பயனாளிகள் தொடர்பான எந்த தரவுகளையும் சேமிப்பதில்லை, அனைத்து தேடல் செயல்பாடுகளில் பயனாளி போனிலேயே நிகழ்வதாக குறிப்பிடுகிறது. தரவுகள் அறுவடை யுகத்தில் இது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஜாடு செயலியில் இருந்தே ஸ்கிரீன்ஷாட்களை சேமித்துக்கொள்ளலாம் என்பதோடு, அவற்றை டேக் செய்து வகைப்படுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் இந்த செயலி ஸ்கிரீன்ஷாட்களுக்கான நூலகமாக அமையும்.
மாணவர்கள் தங்களுக்கான பாட குறிப்புகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கொள்ளலாம். இணையதளங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பராமரிக்கலாம். பில்கள், குறிப்புகளை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த செயலியை நாடலாம். மின்னூல் பகுதிகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளலாம்.
இலவசமான அடிப்படை சேவையுடன் இந்த செயலி அறிமுகம் ஆகியுள்ளது.