பிளாக்செயின் குழப்பம் தீர்க்கும் தளம்!
பிளாக்செயின் தேவையா எனும் கேள்விக்கு தனிநபர்கள் எளிதாக பதில் சொல்லிவிடலாம். பிளாக்செயின் பற்றி தெரியாது என்பதோதோ, பிளாக்செயின் பற்றி அக்கரை இல்லை என்பதோ கூட பதிலாக இருக்கலாம். இப்படி பதில் சொல்வதால் பெரிய பாதிப்பும் இல்லை.
ஆனால், வர்த்தக நிறுவனங்கள் விஷயத்தில் அப்படி இல்லை. பிளாக்செயின் தேவை குறித்து நிறுவனங்கள் தீர்மானமாக முடிவெடுத்தாக வேண்டும். ஏனெனில், பிளாக்செயினுக்கு மாறுவது என்பது எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பதகாவும் அமையலாம்.
அதே நேரத்தில் எல்லோரும் பிளாக்செயின் பற்றி பேசுகின்றனரே என்பதற்காக தேவையில் இல்லாமல் பிளாக் செயினை நாடுவதால் பயன் இல்லாமலும் போகலாம்.
எனவே, வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு பிளாக்செயின் தேவையா, பலன் அளிக்குமா என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு பிளாக்செயின் நுட்பத்தின் அடிப்படை மற்றும் பயன்பாடு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கேள்விக்கு எளிதாக பதில் தெரிந்து கொள்வதற்காக அருமையான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டூயூநீட்ஏபிளாக்செயின் (http://doyouneedablockchain.com/) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம், மிக எளிமையாகவும், தெளிவாகவும் பிளாக்செயின் தேவையா எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நிறுவன செயல்பாட்டின் தன்மை தொடர்பாக எளிதான கேள்விகளை இந்த தளம் கேட்கிறது. இந்த கேள்விக்கு ஆம், இல்லை என பதில் அளிப்பதன் மூலம், உங்களுக்கு பிளாக்செயின் தேவையா? இல்லையா என தெளிவாக பதில் அளிக்கிறது.
இதே பொருளில் விரிவாக எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் நுட்பம் பற்றி அறிய விரும்புகிறவர்கள் இந்த கட்டுரையை படித்துப்பார்க்கலாம். -