ஸ்டீரிமிங் பிரியர்களுக்கான இணையதளம்
பாலுமகேந்திராவின் தொலைக்காட்சி தொடரான ’கதை நேரம்’ வெப் சிரீசாக காணக்கிடைத்தால், அந்த தொடர் முழுவதையும் ஒரே மூச்சில் பார்த்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகலாம்?
இதே போல ராதிகாவின் ’சித்தி’ தொடர் முழுவதையும் இடைவிடாமல் பார்ப்பதாக இருந்தால், எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்?
தொலைக்காட்சி தொடர்களை இப்படி இடைவிடாமல் ஒரே மூச்சில் பார்த்து முடிப்பதை பிங்கே வாட்ச் என்கின்றனர். இணைய ஸ்ட்ரீமிங் யுகத்தில் பிங்கே வாட்ச் என்பது, வெப் சிரீஸ் எனப்படும் வலைத்தொடர்களை தனியாத தாகத்தோடு பார்த்து முடிப்பதையும் குறிக்கிறது.
இணையம் கொண்டாடும் கேம் ஆப் த்ரோன்ஸ் அல்லது மணிஹெய்ஸ்ட் போன்ற தொடர்களை இடைவிடாமல் பார்த்து ரசிப்பது பரவலாக இருக்கிறது. வலைத்தொடர்களை பார்ப்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் விரும்பினால் அவற்றை இடைவிடாமல் பார்த்து விடலாம்.
எதற்கு இந்த இடைவிடாமல் தொடர் பார்க்கும் பழக்கம் பற்றிய புராணம் என்றால், இதற்காக என்றே இப்போது அறிமுகம் ஆகியிருக்கும் இணையதளம் பற்றி அறியமுகம் செய்வதற்காக தான்.
’கேன் ஐ பிங்கே’ ( https://canibinge.com/) எனும் பெயரிலான அந்த தளத்தில், நீங்கள் இடைவிடாமல் பார்க்க விரும்பும் வலைத்தொடரை குறிப்பிட்டீர்கள் என்றால், அந்த தொடர் முழுவதையும் பார்த்து முடிக்க எத்தனை வாரம் ஆகும் என்பதை கணக்கிட்டு சொல்கிறது.
நீங்கள் பார்க்க விரும்பும் தொடர் பெயரை இதற்கான தேடல் கட்டத்தில், சமர்பித்தால் போதும் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பலரும் நெட்பிளிக்சே கதி என இருப்பதால், பிங்கே பழக்கம் நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய பழக்கத்திற்கு உள்ளான ஒருவர் தான் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். நேரத்தை வீணடிக்கும் குற்ற உணர்வு எல்லாம் இல்லாமல், நீங்கள் பார்க்க விரும்பும் தொடர்களை பார்த்து மகிழுங்கள் என ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளோடு, இந்த பிங்கே நேர கணக்கு இணையதளத்தை அவர் அமைத்திருக்கிறார்.
இந்த தளம், இணைய ஆஸ்கர் என அறியப்படும் வெப்பி விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.