இமெயில் முகவரி ரகசியங்களை அறிய ஒரு சேவை

இமெயில் சார்ந்த எண்ணற்ற துணை சேவைகள் இருக்கின்றன என்பது தெரியுமா? இமெயில் சரி பார்க்கும் சேவை இவற்றில் ஒரு வகை. இந்த பிரிவில் தான் ரீச்சர் (https://reacher.email/ ) எனும் புதிய இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது.

அதென்ன இமெயில் சரி பார்த்தல்? குறிப்பிட்ட ஒரு இமெயில் முகவரி உண்மையில் இருக்கிறதா அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட பயனற்ற முகவரியா என்பதை கண்டறியும் வழியே இமெயில் சரி பார்த்தல் என குறிப்பிடப்படுகிறது.

இமெயிலை சரி பார்க்கும் அவசியம் தனிநபர்களுக்கும் ஏற்படலாம். நிறுவனங்களுக்கும் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக இமெயில் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இது மிகவும் அவசியமானது. அதே போல, இமெயில் பட்டியலை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களை அல்லது வாசகர்களை அடைய விரும்புகிறவர்களுக்கும் முக்கியமானது.

நிஜ உலகில் ஒருவரது முகவரி மாறிவிட்டது என்பதை அறியாமல் அவருக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பிக்கொண்டிருப்பது போல, இணைய உலகில் இல்லாத இமெயில் முகவரிகளுக்கு மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கலாம்.

நிஜ உலகிலாவது, முகவரி மாறியிருப்பின் திரும்பி வரும் கடிதங்கள் மூலம் தெரிந்து கொண்டு விடலாம். இணைய உலகில் மெயில்கள் பவுன்ஸ் ஆகும் போது மட்டுமே இதை அறிய முடியும். இல்லை எனில், இல்லாத போகு முகவரிக்கு நம்முடைய மெயில்கள் போய் வீணாகி கொண்டிருக்கும்.

இந்த நிலைக்கு தீர்வாக தான், இமெயில் சரி பார்க்கும் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஹண்டர், நவர்பவுன்ஸ் போன்றவை இந்த சேவையை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில், புதிதாக ரீச்சர்.இமெயில் அறிமுகமாகியிருக்கிறது.

கொத்து கொத்தாக இமெயில் முகவரிகளை சமர்பித்தால், அவற்றில் சரியான இமெயில்கள் எவை, போலி மெயில்கள் எவை என கண்டறிந்து சொல்வதாக ரீச்சர் தெரிவிக்கிறது. ரியல் டைம் என சொல்லப்படும் வகையில் உடனடியாக இமெயில்களுக்கான பதிலை வைத்து, குறிப்பிட்ட இமெயில் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதியாக தீர்மானிப்பதாக ரீச்சர் தெரிவிக்கிறது.

இது கட்டண சேவை தான். ஆனால் மாதம் 50 இமெயில்கள் வரை இலவசமாக பயன்படுத்தலாமாம். எனவே தனிநபர்களும், இமெயில் சரி பார்த்தலுக்கு இந்த சேவையை அணுகலாம்.

இப்படி ஒரு சேவையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? இதனால் என்ன பயன் என உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.