உங்களுக்கான வீடியோ நூலகம்
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணைய சேவை யூடியூப் பவர் யூசர்களுக்கானது. அதாவது, அதிகமாக யூடியூப் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கானது. அதிலும் குறிப்பாக, அதிக யூடியூப் சேனல்களுக்கு சந்தா செலுத்தியிருப்பவர்களுக்கானது.
’பாக்கெட்டியூப்’ ( https://yousub.info/) எனும் இந்த சேவை, யூடியூப் வீடியோ பார்க்கும் அனுபவத்தை சீராக்குகிறது. பயனாளிகளுக்கான யூடியூப் வீடியோ நூலகத்தை உருவாக்கித்தருவதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.
பல்வேறு யூடியூப் சேனல்களில் உறுப்பினராக சேர்ந்து விட்டு, அவற்றில் எந்த சேனலில் இருந்து புதிதாக வீடியோ வந்திருக்கிறது எனத்தெரியாமல் திண்டாடுபவர்களுக்கு இந்த சேவையின் தேவை எளிதாக விளங்கும்.
குரோம் நீட்டிப்பு சேவையாக பயன்படுத்தக்கூடிய பாக்கெட்டியூப் சேவையை தரவிறக்கம் செய்தவுடன், பயனாளிகள் தாங்கள் பார்க்கும் யூடியூப் சேனல்களை எல்லாம், அவற்றின் தன்மைக்கு ஏற்ப பெயரிட்டு வகைப்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு புதிதாக ஒரு வீடியோவை சேர்க்க வேண்டும் என்றால், பாக்கெட்டியூப் ஐகானை கிளிக் செய்தால் போதும், அந்த வீடியோ நூலகத்தில், அதற்குறிய குழுவில் சேர்ந்துவிடும்.
பயனாளிகள் தாங்கள் சந்தா செலுத்தியுள்ள யூடியூப் சேனல்களில் புதிய வீடியோ வெளியாகி இருந்தால், தங்கள் நூலகத்தில் அதைப்பார்த்துக்கொள்ளலாம். வீடியோ வகைகளுக்கு ஏற்ற ஐகான்களையும் அமைத்துக்கொள்ளலாம். இதன் இடைமுகம் யூடியூப் இடைமுகம் போலவே அமைந்திருக்கிறது. போன்களில் செயலியாகவும் பயன்படுத்தலாம்.
நேற்று அறிமுகம் செய்த பிண்டோவெப்பிளேயர் போலவே இந்த சேவையும் அமைந்திருப்பதை உணரலாம். இரண்டுக்கும் பொதுவான அம்சம், வீடியோக்களை நிர்வகிக்க உதவுவதாகும்.