(பாதுகாப்பான) புகைப்படங்களுக்கான இணையதளம்!
புகைப்படங்கள் தொடர்பாக நீங்கள் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பட்டியலில் ’பிக்ஸ்4லேர்னிங்’ (https://www.pics4learning.com/ ) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக கல்வியாளர்களும், மாணவர்களும் இந்த தளத்தை அறிந்திருப்பது அவசியம்.
இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால், காப்புரிமை சிக்கல் இல்லாத மற்றும் பாதுகாப்பான புகைப்படங்களை திரட்டித்தரும் தளமாக இருப்பது தான். இரண்டுமே முக்கியமானவை.
இணையத்தில் புகைப்படங்களை தேட விரும்புகிறவர்களில் பெரும்பாலானோர் கூகுளை அல்லது இன்னும் பலர் நேரடியாக கூகுள் இமேஜ்ஸ் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவான தேடலுக்கு கூகுள் புகைப்பட தேடல் ஏற்றது, மாறாக, குறிப்பிட்ட நோக்கிலான புகைப்பட பயன்பாடு எனில் கூகுள் இமேசை பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் ஏற்படலாம்.
கூகுள் இமேஜசை பயன்படுத்துவதில் உள்ள முதல் வில்லங்கம், அந்த படங்கள் காப்புரிமைக்கு உட்பட்டிருக்கலாம். இதை அறியாமலே ஏதோ இலவச படங்கள் எனும் எண்ணத்தில் அவற்றை எடுத்து பயன்படுத்தும் போது எதிர்பாராத பிரச்சனை வரலாம். முக்கியமாக, வர்த்தக நோக்கிலான திட்டங்கள் எனில் கூகுள் இமேஜசை தவிர்ப்பதே நலம்.
இரண்டாவது பிரச்சனை, கூகுள் இமேஜசில் வில்லங்கமான படங்களும் தோன்றலாம். மேலும், அதன் தேடல் அல்கோரிதமும் அத்தனை நம்பகமானது அல்ல.
எனவே, பிரத்யேகமான புகைப்பட தளங்களை, புகைப்பட தேவைக்கு நாடுவதே ஏற்றது. இந்த வகையில் தான் பிக்ஸ்4லேர்னிங் புகைப்பட தளம் வருகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், காப்புரிமை சிக்கல் இல்லாத மற்றும் வேறு எந்த வில்லங்கமும் இல்லாத புகைப்படங்களை கல்வி சார்ந்த பயன்பாட்டிற்காக பட்டியலிடுகிறது. எல்லா படங்களுமே தேர்வு செய்து பட்டியலிடப்பட்டவை.
புகைப்படங்கள் தொடர்பான காப்புரிமை சார்ந்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தலைப்புகளில் புகைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால், தேவையான படங்களை எளிதாக தேடிக்கொள்ளலாம்.