இசைவிழாவில் சந்திப்போம்!

நல்ல கதையம்சம் கொண்ட ஓடாத திரைப்படம் போல இருக்கிறது ஃபெஸ்ட்டிரைப் ( https://www.festtribe.com/) இணையதளம்.

இந்த தளத்தின் அடிப்படை அம்சத்தை தெரிந்து கொண்டால், அட அருமையாக இருக்கிறதே என நீங்களும் ஆமோதிப்பீர்கள். அதிலும் குறிப்பாக நீங்கள் திரைப்பட விழாக்கள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லக்கூடியவர்கள் என்றால், இது போன்ற ஒரு தளத்தை தான் எதிர்பார்த்திருந்தேன் என்றும் சொல்வீர்கள்.

இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால், இசை விழாக்களுக்கு செல்பவர்களை இணைத்து வைக்கும் சேவையை வழங்குகிறது. இசை விழாக்களில் புதியவர்களை சந்திக்க வைப்பதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.

இசை விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியே செல்வதைவிட நண்பர்கள் சூழ செல்வது இனிமையானது. ஆனால், எல்லா நேரத்திலும் இது சாத்தியமில்லை. மாறாக, செல்லும் விழாக்களில் எல்லாம் புதிதாக நண்பர்களை தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?

ஃபெஸ்ட்டிரைப் இதை தான் சாத்தியமாக்குகிறது. இசை விழா பிரியர்கள், இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தாங்கள் செல்ல இருக்கும் இசைவிழாக்கள் பற்றி குறிப்பிட்டால், அந்த விழாவுக்கு செல்லும் சக இசை பிரியர்களை இமெயில் இந்த தளம் அறிமுகம் செய்கிறது.

இமெயில் தகவல் அடிப்படையில் அந்த ரசிகரை தொடர்பு கொண்டு அறிமுகம் செய்து கொள்ளலாம். இதே போல, யாரோ ஒரு ரசிகர் உங்களையும் தொடர்பு கொண்டு, அடுத்த இசைவிழாவில் சந்தித்து பேசலாம்.

இசை விழா மட்டும் இல்லை, திரைப்பட விழா, பேஷன் நிகழ்ச்சி, வர்த்தக கருத்தரங்கு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற வசதி தேவை.

ஒத்த கருத்துள்ளவர்களை தேடி கண்டறியவும், அவர்களோடு நட்பு வளர்க்கவும் உதவும் இந்த தளத்தை இணையத்தின் ஆற்றலை அடிப்படையாக கொண்ட தளம் என வர்ணிக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த தளம் பயன்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இப்போது ஆரம்ப வாசகத்தை மீண்டும் வாசிக்கவும்.

  • இயக்கத்தில் இல்லாத இணையதளத்திற்கு இந்த அறிமுகம் தேவையா என நினைப்பவர்களுக்காக இன்னொரு அருமையான இணையதளம் பற்றிய பரிந்துரை: https://www.window-swap.com/ - இந்த தளம் மூலம், உலகில் பல்வேறு நாடுகளின் ஜன்னல் வழி காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். விரிவான அறிமுகம் இங்கே: