ஸ்டார்ப் அப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இணையதளம்
தொழில்நுட்ப உலகில் பில்கேட்சை தெரிந்த அளவுக்கு பால் ஆலனை பலருக்கும் தெரியாது. ஆப்பிள் என்றதும், ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுக்கு வரும் அளவுக்கு ஸ்டீவ் வாஸ்னியோக்கை தெரியாது. பேஸ்புக்கை விஷயத்திலும் இப்படி தான், ஜக்கர்பர்கை தெரியும் அவருடன் இருந்த எட்வர்டோ சவேரின் உள்ளிட்டோரை பெரும்பாலானோருக்கு தெரியாது.
இவர்கள் எல்லாம் யார் என்றால், அந்த நிறுவனங்களின் இணை நிறுவனர்கள். அதாவது, குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை அதன் நிறுவனர்கள் துவக்கிய போது அவர்களுடன் இணைந்திருந்தவர்கள். நட்பு நோக்கில் மட்டும் அல்லாமல், தொழில்முனைவு நோக்கிலும் நிறுவனர்களின் கனவுகளை புரிந்து கொண்டு ஆதரித்தவர்கள்.
ஒரு ஸ்டார்ட் அப் வெற்றி பெற வேண்டும் எனில், முதல் இணை நிறுவனர்களை தேடுங்கள் என்பது ஸ்டார்ட் அப் உலகில் பாலபாடங்களில் ஒன்று.
ஸ்டார்ட் அப் பயணத்தில் இணை நிறுவனர்கள் பங்கு முக்கியம் என்றாலும், பெரும்பாலும் நிறுவனர்களே பெயரையும் புகழையும் அள்ளிக்கொள்கின்றனர். நிறுவன பங்குகள் மற்றும் உரிமையிலும் இவ்வாறு நிகழ்வது உண்டு. இது போன்ற நிறுவனர்களில் நிறுவனர்- இணை நிறுவனர்களிடையே மோதல் வெடிக்கலாம் அல்லது மனக்கசப்பு ஏற்படலாம்.
வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப்களில் பின்னாளில் நிறுவனர்கள்-இணை நிறுவனர்களிடையே மோதல் வெடித்த கதைகளும் உண்டு. இந்த மோதல்கள் பெரும்பாலும் நிறுவன வளர்ச்சியை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால், துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்களில் நிறுவனர்களிடையே மோதலோ, கருத்து வேறுபாடோ ஏற்பட்டால், நிறுவன வளர்ச்சியை அது பாதிக்கும். இந்த நிலை ஏற்படாமல் ஸ்டார்ட் அப் நிறுவனர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் சமரச தீர்வு ஏற்படுத்தி தருவதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவனர்களுக்கான உதவி என பொருள்படும் வகையில் பவுண்டர்ஸ்ஹெல்ப் (https://foundershelp.standuply.com/ ) எனும்பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக உணர்ந்து, அதற்கு தீர்வு கண்டு முன்னேற விரும்பினால், சமரச தீர்விற்காக இந்த தளத்தை அணுகலாம்.
இதற்காக நிறுவனர்கள், இந்த தளத்தை தொடர்பு கொண்டு தங்கள் சூழலை விளக்கி பிரச்சனைக்கு தீர்வு காணும் கோரிக்கையை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு தளத்தில் மத்தியஸ்தர்களாக பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் அனுபவசாலிகளில் இருந்து ஒருவரை தேர்வு செய்து கொண்டால், அந்த வல்லுனர் பிரச்சனையை பரிசீலித்து சார்பு இல்லாத தீர்வை முன்வைப்பார்.
இதே ஆலோசனையை வீடியோ சந்திப்பு மூலமும் கோரலாம். இலவச மற்றும் கட்டண சேவைகள் உண்டு.
ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு நிச்சயம் இத்தகைய வழிகாட்டல் அவசியம். பிரச்சனையை தீர்த்துக்கொள்ள யாரை நாடுவது என குழம்பித்தவிப்பதோடு, துறை சார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலை அணுக முடிவது சிறந்தது அல்லவா? அதை தான் இந்த தளம் செய்கிறது.