ஜூமில் கதை சொல்லும் தாத்தா, பாட்டிகள்
குட்நைட்ஜூம் செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த செயலியை பற்றி அறிமுகம் செய்து கொள்வது உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும். ஜூம் வழி கதைகளை கேட்கச் செய்வதன் மூலம், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளையும், கதை கேட்க ஆர்வம் உள்ள சிறார்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது காரணம்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றான நிலையில், ஜூம் வழி வீடியோ சந்திப்புகள் தான் ஆசுவாசம் அளிக்கத்துவங்கின. அது வரை வீடியோ சந்திப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர்கள் கூட, ஜூமை பயன்படுத்த துவங்கினர்.
ஜும் செயலியின் பயன்பாடு பரவலான நிலையில், ஜூம் சார்ந்த உப சேவைகளும் பல உருவாகத்துவங்கின. இவற்றில் ஒன்று தான் குட்நைட்ஜூம்- https://www.goodnightzoom.com/
இரவு நேரத்தில் படுக்கச்செல்லும் முன், குழந்தைகளுக்கு ஜூம் கதைகள் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட செயலி இது. ஜூம் ஏற்படுத்தி தரும் மெய்நிகர் வாய்ப்பை மையமாக கொண்டு, எங்கோ இருக்கும் பெரியவர்கள், என்கோ இருக்கும் குழந்தைகளுக்கு கதைகளை படித்துக்காட்ட வழி செய்வது தான் இதன் நோக்கம்.
அமெரிக்காவில் இருக்கும் பேரன்/பேத்திக்கு இந்தியாவில் இருந்து தாத்தா , பாட்டிகள் ஸ்கைப் வழியே கதை சொல்லும் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தொலைதூரத்தில் இருப்பதை மீறி, பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்யும் இந்த ஐடியாவை இன்னும் கொஞ்சம் விரிவாக செயல்படுத்துகிறது குட்நைட்ஜூம் செயலி.
கொரோனா சூழலில், பெரும்பாலானோர் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை பெரியவர்களுக்கு ஒருவிதமானபாதிப்பை ஏற்படுத்தியது என்றால் பிள்ளைகளுக்கு வேறு விதமாக பாதிக்கிறது. பெரியவர்கள் தனிமையை உணரலாம். குழந்தைகள் நேரத்தை விரட்ட திண்டாடலாம்.
இந்த பின்னணியில், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளை கதை கேட்க தயாராக இருக்கும் குழந்தைகளுடன் இந்த செயலி இணைத்து வைக்கிறது. இந்த செயலியில் உறுப்பினரானால், இரவு நேரத்தில் பெரியவர்கள் யாரேனும் கதை புத்தகம் படித்து காட்டுவதை ஜூம் வழியே கேட்கலாம்.
இந்த ஏற்பாடு குழந்தைகளுக்கு குதூகுலம் அளிப்பதோடு தனிமையை உணரும் பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் பேசும் நல் வாய்ப்பையும் அளிக்கும். இப்படி கதை சொல்லக்கூடிய பெரியவர்களை வாய்மொழி பரிந்துரைகள் மூலம் இந்த செயலி தேர்வு செய்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சத்தையும் மனதில் கொண்டு செயல்படுகிறது.
கொரோனா பாதிப்பு உலகை உலுக்கத்துவங்கிய கட்டத்தில், 2020 மார்ச் மாதம் இந்த செயலி உருவாக்கப்பட்டது. அப்போதைய சூழலில், இந்த செயலி ஏற்படுத்தி தந்த ஜூம் வழியிலான கதை பாலம் பல நெஞ்சங்களுக்கு ஆசுவாசம் அளித்திருக்கும் என நம்பலாம்.