உடற்பயிற்சி வீடியோக்களுக்கான இணையதளம்
யூடியூப் தளத்தில் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவரவர் தங்களுக்கான விரும்பமான தலைப்புகளில் தேவையான வீடியோக்களை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், தேவையான வீடியோவை தேடுவது என்பது யூடியூப்பில் எளிதல்ல. யூடியூப்பில் தேடல் வசதி இருக்கவே செய்கிறது. கூகுளுக்கு அடுத்த பெரிய தேடியந்திரம் என்பது போல யூடியூப் வர்ணிக்கப்படுவதை மீறி, அதன் தேடல் வசதியின் போதாமையை பயனாளிகள் உணரலாம்.
வழக்கமான குறிச்சொற்கள் மூலம் வீடியோக்களை தேடுவது சிக்கலானது என்பது இதற்கு ஒரு காரணம் என்றால், விளம்பர வருவாயை மனதில் கொண்டு யூடியூப் உருவாக்கியுள்ள அல்கோரிதம் முன்னிறுத்தும் தேடல் முடிவுகள் இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது.
இந்த கருத்தில் நீங்கள் உடன்படலாம் அல்லது மாறுபடலாம். ஆனால், யூடியூப்பில் தேடும் போது, நீங்கள் பார்க்க விரும்பிய வீடியோவை அடையாளம் காண முடியாமல் தவித்த தருணங்கள் நிச்சயம் இல்லாமல் இருக்காது. இது யூடியூப்பின் பொதுவான குறைபாடு.
இந்த பின்னணியில், உடற்பயிற்சி தொடர்பான யூடியூப் வீடியோக்களை எளிதாக அடையாளம் காண வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒய்டிஒர்கவுட்ஸ் (https://ytworkouts.com/ ) இணையதளத்தின் அருமையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
யூடியூப்பில் உள்ள உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை பட்டியலிடும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. ஆக, உடற்பயிற்சி வழிகாட்டுதல் வீடியோ தேவை என்றால் இந்த தளத்தை அணுகலாம் என்பது மட்டும் அல்ல, அந்த வீடியோக்களும் அருமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் ஒரு விதமான பலன் உண்டு என்பதால், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பலன் அளிக்கும் வகையிலான வீடியோக்களை உடல் பகுதிகளுக்கு ஏற்ப இந்த தளம் வகைப்படுத்துகிறது. உதாரணத்திற்கு கரங்களை வலுப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோக்களை பார்க்கலாம் அல்லது மார்பு பகுதிக்கான வீடியோக்களை பார்க்கலாம்.
இவ்வாறு தோள் பட்டை, கால்கள், வயிறு, முதுகு உள்ளிட்ட பகுதிகளுக்கான வீடியோக்கள் பட்டியலிடப்பட்டிருப்பதோடு, கார்டியோ மற்றும் முழு உடலுக்குமான உடற்பயிற்சிகளையும் பார்க்கலாம்.
வீடியோக்களை கிளிக் செய்து முகப்பு பக்கத்திலேயே பார்க்கலாம் என்பதோடு, நமக்கு விருப்பமான வீடியோக்களை நமக்கான பக்கத்தில் சேமித்தும் வைக்கலாம். புதிய வீடியோக்களை சமர்பிக்கும் வசதியும் இருக்கிறது.
உடற்பயிற்சி பிரியர்களுக்கு உற்சாகத்தை அளிக்க கூடிய இணையதளம் என்பதில் சந்தேகம் இல்லை. மற்றவர்களுக்கு உடற்பயிற்சிக்கான ஊக்கத்தையும் அளிக்கலாம்.