உங்களுக்கான இணைய உதவியாளர்
நல்லதொரு இணையதளம் உங்களுக்கு பல விஷயங்களை செய்ய வேண்டும். அந்த வகையில், ’வித்யூஅண்ட்மீ’ ( https://withyouand.me/) தளம் உங்களை அதிகாரம் மிக்கவராக உணர வைக்க கூடியதாக இருக்கிறது. அதிகாரம் என்பதை இங்கே உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறேன்.
உங்களுக்கான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் நேரத்தையும், சந்திப்புகளையும் திறம்பட நிர்வகித்துக்கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.
அறிமுக பக்கம் என்பது இணைய மொழியில் லேண்டிங் பேஜ் என குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் அடிப்படையான தகவல்களை கொண்டதாக இந்த பக்கம் அமைந்திருக்கும். பெரும்பாலும் மார்க்கெட்டிங் நோக்கில் இது பயன்படுத்தப்படுகிறது.
எழுத்தாளர் ஒருவர் வாசகர்களுக்கு தனது புதிய பக்கத்தை அறிமுகம் செய்ய விரும்பினால், அதற்கான அறிமுக பக்கத்தை அமைத்து, புத்தகம் தொடர்பான முக்கிய தகவல்களை அளித்து அதை வாங்குவதற்கும் வழி செய்யலாம்.
இதே பாணியில், உங்களுக்கான தனிப்பட்ட அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்ள மேலே சொன்ன இணையதளம் வழி செய்கிறது. இதில் அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்வதன் மூலம், மற்றவர்கள் உங்களை எப்போது தொடர்பு கொள்ளலாம் என்பதி நீங்கள் குறிப்பிடலாம். இதற்கான இணைக்கப்பட்டுள்ள நாட்காட்டியில், உங்கள் வேலை நாட்களை குறிப்பிடுவதன் மூலம், சந்திப்புக்கு உகந்த நாட்களை அடையாளம் காட்டலாம்.
இதே நாட்காட்டி மூலம் மற்றவர்கள் உங்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
இதே பக்கத்தில் உங்கள் இருப்பிடத்தை வரைபடமாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வதற்கான பகுதியும் இருக்கிறது.
மிக எளிதான சேவை தான். ஆனால், எதையும் திட்டமிட்டு செய்ய விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அறிமுக பக்கத்தை அளிக்கும் இந்த தளம் தனக்கான அறிமுக விவரம் இல்லாமல் இருப்பதால் இதன் உருவாக்குனர்கள் பற்றி அறிய முடியவில்லை. பதிவு செய்து கொள்ளும் போது பெரிய அளவில் விவரங்களை கேட்பதில்லை என்றாலும், தரவுகளை இந்த தளம் எப்படி கையாளும் என்று தெரியவில்லை.