உங்களிடம் நல்ல செய்தி இருக்கிறதா? கேட்கும் இணையதளம்
ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு யோசியுங்கள். உலகுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் ஏதேனும் ஒரு நல்ல செய்தி அல்லது தகவல் இருக்கிறதா? அந்த தகவல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதை படித்தால் யாராவது ஒருவர் முகத்தில் புன்னகை மலர வேண்டும். இத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பதற்காக என்றே, புதிதாக சியர்புல்நியூஸ் (https://cheerfulnews.co.uk/ ) எனும் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அம்சங்கள் எல்லாம் இல்லாமல் குறும்பதிவுகளை மட்டுமே வெளியிடுவதற்கான டிவிட்டர் சேவை போல இருக்கும் இந்த இணையதளத்தில், உங்கள் மனதில் உள்ள நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். அவ்வளவு தான் இந்த இணையதளம்,
இவ்வாறு பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தளத்தின் முகப்பு பக்கத்தில் டைம்லைன் பாணியில் வால் போல நீள்கிறது.
காலையில் எழுந்தவுடன் இந்த டைம்லைனை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன் என ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சரியான காரணங்களுக்காக உடற்பயிசியை நேசிக்கிறேன் என ஒருவர் கூறியிருக்கிறார்.
இப்படி நீள்கின்றன நல்ல செய்திகள்.
ஸ்பேம் பாணி குப்பை செய்திகள் கூடாது, ஆபாச செய்திகள் கூடாது, மற்றவர்களை அவமதிக்கும் செய்திகள் கூடாது மற்றும் காப்புரிமை மீறும் தகவல்கள் கூடாது என செய்திகளை பகிர்வதற்கான நெறிமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் எத்தனை காலம் நிலைத்து நிற்கும் என்று தெரியவில்லை, ஆனால் கொரோனா உண்டாக்கியுள்ள நிச்சயமற்ற சூழலில், மற்றவர்கள் முகத்தில் புன்னகை மலரச்செய்யக்கூடிய தகவல்களை பகிருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் தற்காலிக நோக்கிலும் நம் காலத்து தேவை என்றே சொல்லத்தோன்றுகிறது.
இந்த தளத்தில், நான் பகிர்ந்து கொண்ட செய்தியை இங்கே பகிர்கிறேன்; ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க கூடிய நேர் நிறை செய்திகளுக்கான இணையதளம் குட்நியூஸ்நெட்வொர்க்: https://www.goodnewsnetwork.org/